நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சு

0
446

நாட்டில் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் அனைத்து பாடசாலைகளையும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் கொழும்பு,களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து பாடசாலைகளை மீள திறப்பதற்கான பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்,சுகாதார அதிகாரிகளின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் மேல் மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளை திறக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கை 492 ஆகும்.அதில் 412 பாடசாலைகள் பெப்ரவரி 15 ஆம் திகதி ஆரம்பிக்க முடியும் என மாவட்ட அபிவிருத்திக் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அதன்படி கொழும்பு பிரதேச செயலகத்தில் உள்ள 76 பாடசாலைகளில் 73 பாடசாலைகள்,ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள 31 பாடசாலைகளில் 29 பாடசாலைகள்,கடுவலவில் உள்ள 49 பாடசாலைகளில் 17 பாடசாலைகள்,பாதுக்கயில் உள்ள 26 பாடசாலைகளில் 11 பாடசாலைகள்,மஹரகமயில் உள்ள 32 பாடசாலைகளில் 7 பாடசாலைகள்,இரத்மலானையில் உள்ள 27 பாடசாலைகளில் 24 பாடசாலைகள் மற்றும் கொலன்னாவ,ஹோமாகம,கெஸ்பேவ,தெஹிவல,மொரட்டுவ,சீதாவக்க ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளும் பெப்ரவரி மீண்டும் திறப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு மாவட்டத்திலுள்ள 80 பாடசாலைகளை மாத்திரம் மீண்டும் திறக்க முடியாத சூழ்நிலை காணப்படுவதாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை க.பொ.த சாதாரண தர பரீட்சைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதன்பின்னர் சுகாதார அதிகாரிகளின் அனுமதியின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் அனைத்து தரங்களையும் மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.