தமிழ்த்தேசியத்தில் தடம்மாறாது பயணிக்க விரும்புபவர்கள் மாம்பழம் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் – பொ. ஐங்கரநேசன் கோரிக்கை

0
175
தமிழ்த்தேசியத்தில் தடம்மாறாது பயணிக்க விரும்புபவர்கள்
மாம்பழம் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் – பொ. ஐங்கரநேசன் கோரிக்கை
தமிழ்த்தேசியத்தை, தமிழைத் தங்களது பெயரில் கொண்டுள்ள கட்சிகள் மாத்திரமல்ல, அரசுசார்புக் கட்சிகளின் வேட்பாளர்கள்கூடத் தமிழ்த்தேசியம் பற்றி முழங்கி வருகிறார்கள்.
தமிழ்த்தேசியத்தை இன்று உச்சரிப்பவர்கள் பலரும் தமிழ்த்தேசியத்தைக் கைவிட்டவர்களாகவும், தமிழ்த்தேசியத்துக்கெதிரான நிலைப்பாட்டில் பயணிப்பவர்களாகவுமே உள்ளார்கள்.
ஆனால், தமிழ் மக்களின் நெஞ்சில் தமிழ்த்தேசியம் இன்றும் அடைகாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இதனால்த்தான் சனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு இரண்டேகால் இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியத்தில் தடம் மாறாது பயணிக்க விரும்பும் இம்மக்கள் யாவரும் மாம்பழம் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் சனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பின் சார்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கநேசன் சிறுப்பிட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10.11.2024) நடைபெற்ற பரப்புரைக்கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ்த்தேசியம் என்பது உள்ளுடன் அற்ற ஒரு வெற்றுக்கோது அல்ல. ஒரு இனம் பேசுகின்ற மொழி, அது வாழுகின்ற சூழல், அதன் பண்பாடு ஆகியன பற்றிய ஒருகூட்டுப் பிரக்ஞையே தேசியமாகும். இது அந்த இனத்தின் ஆன்மா போன்றது.
தேசியத்தின் கூறுகளாக உள்ள மொழி, சூழல், பண்பாடு ஆகியவனவற்றுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நிகழுகின்ற போதெல்லாம் உண்மையான தேசியவாதிகள் அதற்கெதிராகக் கிளர்ந்தெழுவார்கள். சிங்கள- பௌத்த தேசியவாதத்தால் தமிழினம் ஆக்கிரமிக்கப்பட்டபோதுதான் தமிழ் மக்களிடையே தமிழ்த்தேசிய உணர்வுநிலை மேலேழுந்து தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்டது.
முள்ளிவாய்க்கால் யுத்தத்துடன் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதவழிப் பயணம்தான் முடிவுக்கு வந்தது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் ஜனநாயகரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே  விடுதலைப் புலிகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.
ஆனால், முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் முடிவோடு  ஒரு தொடர் அஞ்சலோட்டம் போலத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அந்தப் பாதையில் இருந்து விலக ஆரம்பித்தது. இன்று அது தமிழ்த்தேசியம் என்ற நிலைப்பாட்டில் இருந்து வெகுதூரம் விலகிவிட்டது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் பெரும்பான்மை வகித்த தமிழரசுக் கட்சி முதலில் கூட்டமைப்பைப் புலிநீக்கம் செய்தது. இப்போது தமிழ்த்தேசியக் கோட்பாட்டையும் முற்றாக நீக்க முனைந்துள்ளது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தேசியத்தையும், சூழலியத்தையும் விடுதலைப் போராட்டத்தின் இலக்கை நோக்கிய இரண்டு வழிமுறைகளாகக் கருதி உறுதியோடு பயணித்து வருகின்றது. தமிழ்த் தேசியத்தில் தடம்மாறாது பயணித்து வரும் நாம்  இம்முறை பாராளுமன்றத் தேர்தலில்  மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். மக்கள் போலித் தமிழ்த்தேசியவாதிகளை நிராகரித்து எம்மை ஆதரிக்க  வேண்டும் என்றும் தெரிவித்தார்.