யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி தேர்த் திருவிழா நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது

0
488

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் கொவிட்-19 சுகாதார கட்டுப்பாடுகளை மீறி தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றது.இதன்போது சுகாதார வழிகாட்டுதல்களை மீறி ஆலயத்தின் தேர்த்திருவிழா நடத்தப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில் குறித்த ஆலயத்தின் தலைவரும் செயலாளரும் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் இருவருக்கும் நேற்றிரவு பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலவும் கொரோனா தொற்றின் அவதானம் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் தனிநபர் வழிபாட்டிற்கு ஒரு நேரத்தில் 50 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் ஆலயத்தின் தனிநபர் வழிபாடுகள் தவிர்ந்த வேறு எந்தவொரு ஒன்று கூடல்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆலயங்களில் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டுமெனவும்,ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேண வேண்டுமெனவும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்து ஆலயங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் எனவும்,எதிர்வரும் மே 31 ஆம் திகதி தொடக்கம் குறித்த கட்டுப்பாடுகள் அமுலில் இருக்குமென இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.