போராடியும் அண்ணனை என்னால் மீட்க முடியவில்லை-சாந்தனின் சகோதரர்

0
194

“இந்த ஒன்றரை வருடமாக போராடியும் அண்ணனை என்னால் மீட்க முடியவில்லை.  அச் செய்தியை அம்மாவிடம் சேர்ப்பதற்கு 2 நாட்களாவது எனக்குத் தேவைப்படுகின்றது.என் தாயாரை பார்க்க நினைப்பவர்கள் இன்னும் இரண்டு நாட்களின் பின்னர் வருமாறு, முன்னாள் இந்திய பிரமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் விடுதலையாகி உடல்நலக் குறைவால் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதுவரை அம்மாவைத் தனிமையில் வைத்திருக்கிறேன்.  யாரையும் சந்திக்கவில்லை யாருடனும் பேசவில்லை எனவும் கோபிக்க வேண்டாம். நேரில் வர விரும்புபவர்களும் 2 நாட்களின் பின்னர் வர முடியுமா…” என்று  அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், என் தாயின் நிலை இனிமேலாவது எந்த தாய்க்கும் வராமலிருக்கட்டும் எனவும் சாந்தனின் சகோதரர் உருக்கமாக வேண்டிக்கொண்டுள்ளார்.முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் இருந்து கடந்த 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன் உள்ளிட்டவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், சாந்தனின் உடல் நிலை சரியில்லாமல் போகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  எனினும், அவரது உடல் நிலை தொடர்ந்தும் சீரற்ற நிலையில் இருந்ததால் அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு சாந்தனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், துரதிஷ்டவசமாக நேற்றையதினம் அதிகாலை அவர்  தமிழகத்தில் வைத்து காலமானார்.

update

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனனின் உடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குப் பிறகே இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சாந்தனின் சகோதரர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.