கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிழப்பவர்களின் உடல்களை இரணைத்தீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.எனினும் குறித்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைத்தீவில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நேற்றைய தினம் அமைச்சரவை சந்திக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் கெஹலிய ரம்புக்கவெல்ல கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் உடல்களை புதைப்பதற்கு இரணைத்தீவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இரணைத்தீவில் வசிக்கும் மக்கள் இன்று காலை 9.00 மணியளவில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அங்குள்ள மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாவது “தற்பொழுது இரணைத்தீவில் 108 குடும்பங்களை சேர்ந்த 335 பேர் வசித்து வருகின்றோம் எங்களின் முக்கிய வாழ்வாதாரம் மீன்பிடி தொழில் ஆகும்.அத்துடன் இரணைத்தீவில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை.கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் உடல்களை தங்களுடையை தீவில் புதைப்பதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவிக்கின்றோம்” என்று கூறியுள்ளனர்.





