பிறந்து 8 நாட்களை கொண்ட குழந்தை கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பு

0
343

கம்பளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 8 நாட்களை கொண்ட குழந்தை கொவிட் நிமோனியா காரணமாக உயிரிழந்துள்ளது.

நேற்றைய தினம் கொரோனா தொற்று காரணமாக பதிவான உயிரிழப்புக்களில் குறித்த குழந்தையின் உயரிழப்பும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 25 ஆம் திகதி பிறந்த குழந்தை மே 27 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளது.அதன்பின் வீட்டிற்கு சென்ற குழந்தைக்கு வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் குழந்தை மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கம்பளையில் உள்ள புஸ்ஸல்லாவை பிரதேசத்தில் வசிக்கும் குழந்தையின் தாய் தந்தைக்கு இதுவரை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை எனவும் இருப்பினும் அவர்களிடமிருந்து குழந்தைக்கு கொரோனா தொற்று பரவி இருக்கக்கூடும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,900 ஐ தாண்டியுள்ளது.அதற்கமைய நேற்றைய தினம் 67 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.அதன்படி ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான கொரோனா உயிரிழப்புக்கள் இது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புக்களில் 19 உயிரிழப்புக்கள் மே 17 ஆம் திகதி தொடக்கம் மே 31 ஆம் திகதி வரை நிகழ்ந்தவை என்றும் ஏனைய 48 உயிரிழப்புக்கள் ஜுன் 1 ஆம் திகதி தொடக்கம் ஜுன் 8 ஆம் திகதி வரை நிகழ்ந்தவை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் பதிவான மொத்த கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஜுன் மாதத்தில் முடிவடைந்த 9 நாட்களில் பதிவான கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 426 என அரசாங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.