கொரோனா தொற்றாளர்களுக்கு இன்று முதல் வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கப்படும்!!!

0
388

அறிகுறிகள் அற்ற கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்குகின்ற திட்டம் இன்று(09) முதல் ஆரம்பமாகின்றது.

குறித்த திட்டம் இதுவரை மேல் மாகாணத்தில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளை இன்று முதல் நாடாளவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2 முதல் 65 வயதிற்குட்பட்ட ஆபத்தான நிலையில் இல்லாத அல்லது அறிகுறிகளற்றோருக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சிகிச்சையளிக்கப்படும்.

தினசரி அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணத்தினாலும் மற்றும் வைத்தியசாலைகளில் நெரிசல் நிலை தோன்றுவதனால் மேற்குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.சி.ஆர் அல்லது என்டிஜன் பரிசோதனை மூலம் யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் பிரதேச வைத்திய அதிகாரிகளால் பரசோதிக்கப்பட்டு வீடுகளிலேயே சிகிச்சைப் பெற பரிந்துரைக்கப்பட வேண்டும்.

அதன் பின்னர் நோயாளர்கள் சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் வீடுகளில் சிகிச்சையளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தொலைப்பேசி ஊடாக பதிவுகளை மேற்கொண்ட பின்னர் அவர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் வைக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

24 மணித்தியாலமும் செயற்படுகின்ற 1390 என்ற தொலைப்பேசி இலக்கம் ஊடாக மேற்குறித்த நடவடிக்கைகள் ஒருங்கினைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.