கொரோனா தொற்றின் அவதானத்தை கருத்திற் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்களுக்கு விரைவான என்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள பாராளுமன்ற பிரதானிகள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி குறித்த பரிசோதனை இன்று(17) காலை 9 மணிதொடக்கம் மதியம் 12 மணிவரை மேற்கொள்ள ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நரேந்திர பெர்னாண்டோ அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பிரதேசங்களில் இருந்து வருகை தரும் அதிகாரிகள் இந்த பரிசோதனைகளுக்கு உட்படுவது மிகவும் பொருத்தமானது என சுகாதார பிரிவினர் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார பிரிவு பாராளுமன்ற பிரதானிகளுக்கு வழங்கிய அறிவுறுத்தலின் படி,பாராளுமன்ற உறுப்பினர்கள்,பாராளுமன்ற பொது செயலாளர்,ஊழியர்கள் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் ஆகியோரது ஆரோக்கியத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக பாராளுமன்ற பிரதானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நாட்களில் 20 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பாராளுமன்ற ஊழியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





