மொஸ்கோவில் நேற்று காலை நிலவர அறிக்கையின் படி,கடந்த 24 மணிநேரத்தில் டெல்டா வைரஸ் தொற்றுடன் 9,120 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் அதிகரித்து வரும் குறித்த வைரஸ்,முதன் முதலாக இந்தியாவில் அடையாளம் காணப்பட்டது.மொஸ்கோவில் 2 வாரங்களுக்கு முன்பாக மூவாயிரமாக காணப்பட்ட டெல்டா வைரஸ் தொற்று,சென்ற 2 தினங்களில் 9 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும்,அங்கு 3 ஆவது அலையை எதிர்கொள்வதற்கான அபாயம் காணப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று செய்ன்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் (Saint Petersburg) அமைந்துள்ள உதைப்பந்தாட்ட மைதானத்தில்,ரசிகர்கள் கூடும் இடங்களில் உணவு விற்பனை செய்வதற்கு தடைசெய்யப்பட்டதுடன், மொஸ்கோவில் புதிய சுகாதார கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
அத்துடன் அங்கு பதிவான 90 வீதமான புதிய தொற்றுக்களுக்கு காரணம் டெல்டா வைரஸ் என நகரமேயர் செர்கய் சொப்யனின்(Sergai Sobyanin) தெரிவித்துள்ளார்.மேலும் கடந்த காலங்களில் மொஸ்கொ நகரம் வழமைக்கு திரும்பி வந்த நிலையில் மீண்டும் அங்குள்ள வைத்தியசாலைகள் நெருக்கடியான சூழ்நிலைகளை சந்தித்து வருகின்றன.அத்துடன் தற்பொழுது மேலதிக படுக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
மொஸ்கோவில் அரச சேவையாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.12 மில்லியன் சனத்தொகை கொண்ட மொஸ்கோ நகரில் 1.5 மில்லியன் சனத்தொகையினருக்கு தடுப்பூசிகளின் இரண்டு நிலைகளும் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இங்கிலாந்தில் புதிய அலைகள் உருவாகி வருவதாக அந்நாட்டின் தடுப்பூசி மற்றும் நோயெதிர்ப்புக்கான குழுவின் பேராசிரியர் அடம் ஃபின் (Adam Finn) தெரிவித்துள்ளார்.இருப்பினும் கடந்த ஜனவரி மாதத்தில் வைத்தியசாலைகள் பல்வேறு அழுத்தங்களை எதிர்கொண்டது போல இம்முறையும் அதே போல் எதிர்கொள்வதற்கான சூழ்நிலைகள் இல்லை என அந்நாட்டு தொற்று நோயியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





