ஜப்பானிய கடல் வலய எல்லைக்குள் சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் வெடிப்பு!

0
1360

சீனா ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic missiles) சில தைவானை அண்டி அமைந்துள்ள தனது பிரத்தியேகப் பொருளாதாரக் கடல் வலயத்தினுள் (Japan’s Exclusive Economic Zone-EEZ) வெடித்துள்ளன என்று ஜப்பான் குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க சபாநாயகர் நான்ஸி பெலோசி மேற்கொண்ட விஜயத்தை அடுத்துத் தைவானை அச்சுறுத்தும் விதமான பெரும் போர் ஒத்திகைகளைச் சீனா அப்பிராந்தியத்தில் ஆரம்பித்துள்ளது. நிஜமான வெடிப்பொருள்களையும் போராயுதங்களையும் ஏவி நடத்தப்படுகின்ற பயிற்சி ஒத்திகைகள் தைவான் நீரிணைப் பகுதியில் பெரும் பதற்ற நிலையை

உருவாக்கியிருக்கிறது. சீனப் பெரு நிலப்பரப்பில் இருந்து ஏவப்பட்ட ஒன்பது பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஐந்து ஜப்பானின் பிரத்தியேகப் பொருளாதாரக் கடல் வலயத்தின் உள்ளே வீழ்ந்துள்ளன என்று ரோக்கியோவில் ஐப்பானியப் பாதுகாப்பு அமைச்சர் நோபுவோ கிஷி(Nobuo Kishi) செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து ராஜதந்திர வழிகள் ஊடாகச் சீனாவிடம் ரோக்கியோ தனது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

போர் ஒத்திகைகளின் போது சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள்

ஜப்பானின் பிரத்தியேகப் பொருளாதார வலயத்தினுள் வீழ்வது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானின் பிரத்தியேகப் பொருளாதார வலயம் என்பது அதன் கரையில் இருந்து பல தீவுகளையும் உள்ளடக்கிய சுமார் 200 கடல் மைல்கள் விஸ்தீரணம் கொண்ட கடல் வலயம் ஆகும். தைவானை அண்டி அமைந்திருக்கின்ற ஒகினாவா (Okinawa) தீவை அண்டிய பகுதி வரை அது நீண்டுள்ளது. (வரைபடம்)

இதேவேளை தைவானைச் சூழவுள்ள பகுதிகளில் பிரமாண்டமான போர்ப் பயிற்சிகளைச் சீனா உடனடியாக நிறுத்தவேண்டும் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கேட்டிருக்கிறார்.

சபாநாயகர் பெலோசியின் விஜயத்தை மிகைப்படுத்திக் காட்டும் செயல்களைச் சீனா கைவிட வேண்டும் என்று அமெரிக்காவின் ராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் கேட்டிருக்கிறார். சீனாவின் போர்ப் பயிற்சி தைவானின் கடல் மற்றும் விமானப் போக்குவரத்துகளைப் பாதித்துள்ளது. தைவான் நீரிணைப் பகுதியூடான கப்பல் போக்குவரத்துக்களும் மற்றும் தைவானின் சர்வதேச விமான நிலையத்துக்கான சுமார் 50 வெளிநாட்டு விமான சேவைகளும் பாதுகாப்புக் காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளன.

சுமார் 20 சீனப் போர் விமானங்கள் தனது ஆகாய எல்லைக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன என்று தைவான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தைவான் படைகள்”போரை விரும்பாத போர் ஆயத்த நிலையில் உள்ளன” என்றும் அது கூறியுள்ளது. 05-08-2022 தாஸ்நியூஸ் – பாரிஸ்.