வடக்குகிழக்கில் காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் தாமதான செயற்பாட்டை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வுகள் இடம்பெறுகின்ற காலத்தில் சில முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றபோதும் பின்னர் அந்த விடயங்கள் கிடப்பில் போடப்பட்டு வருகின்றன.
தற்போது பொருளாதார பின்னடைவுகள் இந்த தாமதங்களுக்கான காரணங்களாக கூறப்படுகின்றன.இதனை மையப்படுத்தியே இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் தூதுவர் நேற்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயங்களில் பற்றாக்குறை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல் அல்லது அதிகார துஸ்பிரயோகம் என கூறப்படும் பொறுப்புக்கூறல் பற்றாக்குறையால் இலங்கை தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் குறித்த பிரச்சினைகள் தவிர ஏனைய குற்ற வழக்குகள் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் காது கேளாத மௌனத்தைக் கடைப்பிடிக்கிறது என்று ஆங்கில ஊடகம் ஒன்று விமர்சனம் வெளியிட்டுள்ளது.





