யூடியூப்பர் கிருஷ்ணா இளவாலை பொலிஸாரால் கைது – நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை!
யூடியூப்பர் கிருஷ்ணா இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலைய சிறைக் கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த youtuber இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள் அத்துமறி உள் நுழைந்து காணொளி பதிவு செய்துள்ளார். இந்த காணொளியில் பாவிக்கப்பட்ட சொற்பிரயோகங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது.
இந்நிலையில் குறித்த யூடியூப்பர் இன்றையதினம் அந்த வீட்டுக்கு மீண்டும் செல்ல முயன்றவேளை பண்டத்தரிப்பு – சில்லையூர் மத்தி இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன்போது அவருடன் இன்னும் மூன்றுபேர் என மொத்தமாக நால்வர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை பொலிஸார் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாக்கு மூலம், ஊர் இளைஞர்களின் வாக்குமூலத்தை பெற்றனர். அதன்பின்னர் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
வற்புறுத்தல், அத்துமீறி வீட்டினுள் உட்புகுதல், தகாத வார்த்தை பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த நால்வரில் ஒருவர் மனித உரிமைகள் தொடர்பான நிறுவனம் ஒன்றில் பயிலுனராக பணியாற்றுவதாக அறியமுடிகிறது.
கைது செய்யப்பட்ட நால்வரும் நாளையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.





