டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தற்போதைய நிலவரம் என்ன?

0
113

டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 5) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 60.39% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது

இந்தத் தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மொத்தமாக 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் சார்பில் தலா 70 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

பாஜக 68 வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) சார்பில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

நிலவரம் என்ன?

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் எந்த கட்சி முன்னிலையில் உள்ளது? ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்- 36.

காலை 9.45 மணி நிலவரப்படி முன்னிலை நிலவரம்.

ஆம் ஆத்மி- 20

பாஜக – 49

காங்கிரஸ் – 1

டெல்லியில் 2015 மற்றும் 2020 சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 2015ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 67 இடங்களையும், 2020இல் 62 இடங்களையும் வென்றது.

இதுவரை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், பாஜக முன்னிலை வகிப்பதாக காட்டப்பட்டுள்ளது. அதேசமயம் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது இடம் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை இழந்தால், அது அக்கட்சிக்கு மிகப்பெரிய தோல்வியாக அமையும். கடந்த பத்தாண்டுகளில், டெல்லி மற்றும் பஞ்சாபில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததன் மூலம், ஒரு தேசிய கட்சியாக உருவெடுத்தது ஆம் ஆத்மி.

  • அமெரிக்கா: இந்தியர்களை கைவிலங்கிட்டு அழைத்து வந்தது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன?6 பிப்ரவரி 2025
  • ஆவணமற்ற இந்திய குடியேறிகளை கைவிலங்கிட்டு திருப்பி அனுப்பியது பற்றி அமெரிக்க ஊடகங்கள் சொல்வது என்ன?7 பிப்ரவரி 2025
அரவிந்த் கேஜ்ரிவால்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்

டெல்லி சட்டமன்றம் ஒரு பார்வை

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பலவும் பாஜகவே வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தன. ஆம் ஆத்மி இரண்டாம் இடத்திற்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த முறை சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவானது 60.4% மட்டுமே. கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது இது மிகவும் குறைவான வாக்குப்பதிவு.

2013-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 66% வாக்குகள் பதிவாகியிருந்தது. 2015-ம் ஆண்டு தேர்தலில் 67% ஆக வாக்குகள் பதிவாகின. 2020-ம் ஆண்டு தேர்தலில் 63% ஆக வாக்குகள் பதிவாகின. தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவில் 60.4% வாக்குகளே பதிவாகியுள்ளன.

டெல்லி சட்டமன்றத்தில் உள்ள 70 தொகுதிகளில் 12 தொகுதிகள் தனித்தொகுதிகளாகும். டெல்லியில் மொத்தம் 1.55 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 83.49 லட்சம் வாக்காளர்கள் ஆண்கள். 71.74 லட்சம் வாக்காளர்கள் பெண்களாவார்கள்.

  • டெல்லியில் 26 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடிக்குமா பாஜக? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?5 பிப்ரவரி 2025
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தற்போதைய நிலவரம் என்ன?46 நிமிடங்களுக்கு முன்னர்

ஆட்சியைப் பிடிக்குமா பாஜக?

தேர்தல் முடிந்த அன்று மாலை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

11 கருத்துக்கணிப்புகளில் 8 கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவே ஆட்சி அதிகாரத்திற்கு வரும் என்று தெரிவித்தன. பிப்ரவரி 6-ஆம் தேதி அன்று வெளியான இரண்டு கருத்துக்கணிப்பு முடிவுகளும் பாஜகவுக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்று கூறியது.

ஆனால் ஆம் ஆத்மி கட்சியினர் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை புறக்கணித்தனர். மேலும் 2013 மற்றும் 2015 தேர்தல்களின் போது வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை அவர்கள் மேற்கோள்காட்டினர்.

ஆம் ஆத்மி கட்சி குறைந்தது 50 இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பதாக அக்கட்சி தலைவர்கள் அறிவித்தனர்.

டெல்லி முதல்வர் ஆதிஷி , டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் 2025

கடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களில் நடந்தது என்ன?

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கு எதிராக 2011-ம் ஆண்டு அண்ணா ஹசாரேவுடன் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன. அண்ணா ஹசாரேவுடன் அர்விந்த் கேஜ்ரிவாலும் அந்த போராட்டங்களில் பங்கேற்றார். மேலும் காங்கிரஸை வெளிப்படையாக அவர் விமர்சனம் செய்தார்.

2013-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. 70 தொகுதிகளில் போட்டியிட்டு 28 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸை அர்விந்த் கேஜ்ரிவால் விமர்சனம் செய்தார். இருப்பினும் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் ஆதரித்தது. முதல்முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் முதல் அமைச்சரானார்.

2013-ஆம் ஆண்டு தேர்தலில் தான் இறுதியாக பாஜக இரட்டை இலக்கங்களில் தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக அந்த தேர்தலில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் வெகு சில தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

2013-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு ஆம் ஆத்மி 2015 மற்றும் 2020 தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தன.

2013-ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி 29% வாக்கு வங்கியை கைப்பற்றியது. காங்கிரஸின் வாக்கு வங்கி அப்போது 25% ஆக இருந்தது. மேலும் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது பாஜக டெல்லியில் 30%-க்கும் மேல் வாக்கு வங்கியை வைத்திருந்தது. 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2015-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெறும் மூன்றே தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் அதன் வாக்கு வங்கியானது 30%க்கும் அதிகமாகவே இருந்தது. ஆனால் ஆம் ஆத்மி 67 தொகுதிகளில் வெற்றி பெற்று 50% வாக்கு வங்கியை தன் வசமாக்கியது.

2020-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. அதன் வாக்கு வங்கி 50%க்கும் அதிகமாகவே இருந்தது. பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஆனால் இந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கூறிக் கொள்ளும்படியான வெற்றியைக் கூட பெறவில்லை.