கொரோனா தொற்று பரவல் காரணமாக மேல் மாகாணத்தில் விதிக்கப்பட்டிருந்த சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட 51 தனியார் பேருந்துகளின் நாளாந்த சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணையகத்தின் பிராந்திய மேலாளர் சானக்க லங்கானந்த நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.
பேருந்துகளில் அதிகமான எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றி சென்றமை தொடர்பாக மேல் மாகாணத்தின் போக்குவரத்து ஆணையகத்தின் கீழ் செயற்படுகின்ற 07 பிராந்திய அலுவலகங்களுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து போக்குவரத்து ஆணையகத்தின் தலைவர் பிரசன்ன சஞ்சீவாவின் அறிவுறுத்தலின் படி கொழும்பு இலக்கம் 04 அலுவலகத்தின் கீழ் இயங்கும் 1078 தனியார் பேருந்துகளை ஆய்வு செய்வதற்கு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதனைதொடர்ந்து அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்ற 51 தனியார் பேருந்துகள் அடையாளம் காணப்பட்டன.
குறித்த பேருந்துகள் பிட்ட கொட்டுவையில் இருந்து கொட்டாவ,ஹோமாகம,மகரகம,மத்தேகொட, அவிசாவலை,கொட்டாவை-பிலியன்தல,மகரகம-பிலியன்தல,மகரகம-கடுவாவல,மொரகஹேன-கொட்டாவ,கொட்டாவ-தலகல,ஹோமாகம மற்றம் ஹங்வெல்ல ஆகிய வீதிகளில் இயங்கும் பேருந்துகளே இவ்வாறு சேவையில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





