இரத்தினபுரி மாவட்டத்திற்கு ஐந்து தமிழ் தேசிய பாடசாலைகள்- ரூபன் பெருமாள் நன்றி தெரிவிப்பு.

0
509

மறைந்த தலைவர்,கௌரவ அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்ற காலகட்டத்தில், அமைச்சர் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தில் 05 தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த
அப்போதைய கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அவர்களிடம், கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மறைந்த தலைவரின் பரிந்துரை கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களுடனான சந்திப்பின்போது எமது மக்களின் முதன்மை வேண்டுகோளாக அவருக்கு முன்வைக்கப்பட்ட தேசிய பாடசாலை வேண்டுகோளானது, இன்று, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் செயற்திட்டத்தின் கீழ் கடந்த மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ் விடயம் குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்திய கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும், பிரதமரின் இணைப்புச் செயலாளர் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களுக்கும், அமைச்சரவைக்கு அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்த கல்வி அமைச்சர் கௌரவ ஜீ.எல்.பீரிஸ் அவர்களுக்கும் இரத்தினபுரி மாவட்ட தமிழ் சமூகம் சார்பாக நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.

எதிர்காலத்தில் மலையக மாணவர்கள் பயனடையும் வகையில் அதிகளவான வளப் பகிர்வுகள் மற்றும் செயற்திட்டங்கள் மூலம் கிடைக்கப்பெறும் ஒதுக்கீடுகள் மூலம் எமது பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படும்.

இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரே தடவையில் 05 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இதற்கு மேலாதிகமாக அல் அக்ஸா முஸ்லிம் பாடசாலையும் இப்பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

01. இ/ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயம் – கஹவத்தை.
02. இ/கனகநாயகம் தமிழ் மகா வித்தியாலயம் – பலாங்கொடை.
03. இ/சென் ஜோன்ஸ் தமிழ் மகா வித்தியாலயம் – இறக்குவானை.
04. இ/ இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயம்- இரத்தினபுரி
05. இ/தேல தமிழ் மகா வித்தியாலயம்- நிவிதிகல.

இச்செயற்பாடுகளின் போது பொறுப்போடு செயலாற்றிய கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும், மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்கள் மேலும் தெரிவித்தார்.