முகப்புத்தகத்திற்கு தேவையான படப்பிடிப்பு என்று கூறி 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை கடத்தி சென்ற கல்வி வகுப்பு ஆசிரியர் மற்றும் அதற்கு உதவி வழங்கிய அழகுக் கலை நிபுணர் உட்பட 4 பேரை கைது செய்துள்ளதாக யக்கலமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கல்வி வகுப்பு ஆசிரியர் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் எனவும் கடத்தி செல்லப்பட்ட மாணவிக்கு 16 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த ஆசிரியர் மாணவியின் வீட்டிற்கு சென்று அவருக்கு கல்வி வகுப்புக்களை நடத்தி வந்துள்ளார எனவும் பின்னர் இருவருக்குமிடையில் காதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியரின் வயது அதிகம் என்பதனால் மாணவியின் பெற்றோர் அவர்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னர் மாணவியை கடத்துவதற்கு 3 வாரங்களுக்கு முன்னதாகவே திட்டம் தீட்டியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் அழகுக் கலை நிபுணர் ஒருவரின் உதவியைப் பெற்று அவருக்கு தொலைப்பேசி அழைப்பொன்றினை விடுத்து குறித்த மாணவியையும் அவருடன் சேர்த்து மேலும் இரண்டு சிறுமிகளையும் முகப்பபுத்தகத்திறுகு தேவையான படப்பிடிப்பை மேற்கொள்ள வேண்டும் என சிறுமிகளிடம் கூறி அவர்களை அழைத்து வருமாறு தெரிவித்துள்ளார்.அத்துடன் அவர்களை அழைத்து வருவதற்கு கார் ஒன்றினையும் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த படப்பிடிப்பு சிதலெதல பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் எனக் கூறி 3 சிறுமிகளும் காரில் அழைத்து செல்லப்பட்டுள்ளதோடு,அழகுக்கலை நிபுணர் காரின் பின்னால் மோட்டார் சைக்களில் பயணித்துள்ளார்.அத்துடன் குறித்த இடத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்த ஆசிரியர்,சிறுமிகளை பலாத்தகாரமாக கடத்தி சென்றுள்ளார் எனவும் ஆசிரியருக்கு உதவியாக மற்றொரு நபர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரான ஆசிரியர் மாணவிகளை கடத்தி செல்வதை அகுலஹேன பிரதேசத்தில் வைத்து பார்த்த ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநர் குறித்த ஆசிரியரை துரத்தி சென்று அவர்களை பிடித்துள்ளார்.
இதுவரையிலும் சந்தேக நபரான கல்வி வகுப்பு ஆசிரியர் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும்,குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஒட்டுநர் மற்றும் ஆசிரியர் பயணித்த முச்சக்கர வண்டி ஓட்டநர் ஆகியோர் கைது செய்யப்படுவர் என யக்கலமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





