நாட்டில் அமைந்துள்ள சில வைத்தியசாலைகளில் குவிந்துள்ள அடையாளம் காணாத சடலங்கள் தொடர்பில் உரிய சட்ட நிலைமைகளை ஆராய்ந்து வைத்தியசாலைகளில் இருந்து அகற்றும் பணிகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஏனைய பல காரணங்களால் சில சடலங்கள் சில வைத்தியசாலைகளில் விடுவிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.இது குறித்து மிகுந்த அவதானம் செலுத்தி அவற்றை விரைவில் அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் அறுவுறுத்தியுள்ளார்.
பொது வைத்திய தாதிகள் சங்கத்தில் இன்று(03) கலந்துரையாடல்களை மேற்கொண்ட போதே அவர் மேற்குறித்து ஆராயுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
நீண்ட நாட்களாக வைத்தியசாலைகளில் குவிக்கப்பட்டிருந்த சடலங்கள் சில நாட்களுக்கு முன்பு வைத்தியசாலையில் இருந்து அகற்றப்பட்டிருந்ததுடன்,மீதமுள்ள சடலங்களை விரைவில் அகற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சில வைத்தியசாலைகளில் உள்ள பாழடைந்த பிரேத அறைகள் மற்றும் குளிர்சாதனங்களை விரைவில் சரி செய்யுமாறு சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வைத்தியசாலைகளில் அநாவசியமாக சடலங்களை குவிவதை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்கவெல்ல குறிப்பிட்டுள்ளார்.





