ஒரு மாதத்திற்கும் மேலதிகமாக நீடிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கம்!!!

0
282

நாடு முழுவதிலும் 41 நாட்களாக நடைமுறையில் காணப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று(01) காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்ததை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இரவு 10 மணிதொடக்கம் நாடு முழுவதிலும் நடைமுறையாகும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அரசாங்கம் அமுல்ப்படுத்தியது.

இருப்பினும் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்கள் பதிவாகும் எண்ணிக்கை குறைவடைந்ததன் காரணத்தினால் இன்று தொடக்கம் நாடு மீள திறக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டியை சுகாதார அமைச்சு நேற்றைய தினம்(30) வெளியிட்டிருந்தது.

அதற்கமைய தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டிருந்தாலும் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறையில் காணப்படும்.

தினமும் இரவு 10 மணிதொடக்கம் அதிகாலை 4 மணிவரை அத்தியாவசியமற்ற போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்படமாட்டாது.அத்துடன் பொதுக் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தில் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் ஏற்றிச் செல்லப்பட வேண்டும்.அதிசொகுசு போக்குவரத்துக்களில் வளி சீராக்கல் பயன்படுத்துவதை தவிர்த்து ஜன்னல்கள் அனைத்தும் திறந்து பயணிப்பதற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வேலைத்தளங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஊழியர்கள் சேவைக்கு அழைக்கப்பட வேண்டும்.முடிந்தளவு வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும்.

வீட்டிலிருந்து தொழில் மருத்துவ தேவை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வெளியே செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் நடத்தப்படும் விருந்துபசார நிகழ்வுகள் அனைத்து வகையான விருந்துபசாரங்களுக்கும் ஒக்டோம்பர் 31 ஆம் திகதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பதிவு திருமணங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதில் 10 பேருக்கு மாத்திரம் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு பின்னர் திருமண மண்டபங்களில் 50 நபர்களுக்கு மேற்படாத வகையில் அல்லது 25 சதவீதமானோரை உள்ளடக்கி திருமண வைபவங்களை நடத்த முடியும்.இருப்பினும் திருமண நிகழ்வுகளில் மதுபான உபசாரங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண சடங்குகளில் ஒரே தடவையில் 10 பேருக்கு மாத்திரம் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இருப்பினும் 16 ஆம் திகதிக்கு பின்னர் ஒரே தடவையில் 15 பேருக்கு மாத்திரம் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 200 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய ஆரம்பிக்க முடியும்.முன் பள்ளிகளை 50 சதவீத மாணவர்களை கொண்டு முன்னெடுக்க முடியும்.மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கட்டுமான தளங்களின் பணிகளை சுகாதார வழிகாட்டதல்களுக்கு அமைய முன்னெடுக்க முடியும்.விவசாய நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தொழிற்சாலை நடவடிக்கைகள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய முன்னெடுக்க முடியும்.

திறையரங்குகளை திறக்க அனுமதி இல்லை.விளையாட்டு நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை.கண்காட்சிகள் நடத்த அனுமதியில்லை.