இங்கிலாந்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொவிட் – 19 கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த வேளை,அந்த தீர்மானமானது மேலும் 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜுன் 21 ஆம் திகதி கொவிட் – 19 கட்டுப்பாடுகள் நீக்கப்படவிருந்த நிலையில்,தற்பொழுது குறித்த தீர்மானம் ஜுலை 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக,அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அருந்தகங்கள்,சினிமா போன்றவற்றில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தல் போன்ற கட்டுப்பாடுகள் 4 வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதுடன்,இரவு விடுதிகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வாரங்களுக்கு பின்னர் கட்டுப்பாடுகளை நீடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படமாட்டாது என நம்பப்படுவதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து முழுமையாக விடுபடும் இறுதி நாள் ‘சுதந்திர நாள்’ போன்று எதிர்பார்க்கப்பட்டு வந்துள்ளது.இருப்பினும் இந்தியாவில் பரவி வரும் உரு திரிபடைந்த வைரஸ் அதனை குழப்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தோன்றி தற்போது உலகெங்கும் பரவி வரும் டெல்டா வைரஸ் தொற்று அதிகரித்ததையடுத்து இந்த தீரமானம் எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் அங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை வாராந்தம் 64 வீதத்தால் அதிகரித்து வருகின்றது.
டெல்டா வைரஸின் அறிகுறியாக தடிமன்,தலைவலி,மூக்கு வடிதல் என்பனவாகும்.இருப்பினும் இங்கிலாந்தில் உள்ள இளம் வயதினருக்கு குறித்த வைரஸின் அறிகுறியாக தடிமன் மட்டும் காணப்படுகின்றது.
சாதாரணமாக பலருக்கும் தோன்றும் தலைவலி,தொண்டை வறட்சி,மூக்கு வடிதல் போன்றன,தற்சமயம் டெல்டா வைரஸ் தொற்றாளர்களில் பொதுவான நோய் அறிகுறிகளாக மாறியுள்ளன.எனவே பருவகால சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளோர் தங்களை வைரஸ் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது என இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது இங்கிலாந்தில் பரவி வரும் 90 வீதமான தொற்றுக்களுக்கு டெல்டா என்கின்ற இந்தியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அது இங்கிலாந்தில் தோன்றிய அல்பா வைரஸ் திரிபை விட 40 – 80 வீதம் வரை வேகமாக பரவும் தன்மையை கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.





